No results found

  ரூத்து ஆகமம்

  அதிகாரம் 1

  1 நீதிபதிகளுடைய காலத்தில், ஒரு நீதிபதியினுடைய நாட்களிலே நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. அதைக்கண்டு யூதா நாட்டுப் பெத்லகேம் நகர மனிதன் ஒருவன் தன் மனைவியோடும் இரண்டு புதல்வர்களோடும் மோவாப் நாட்டுக்குப் பிழைக்கச் சென்றான்.

  2 அவன் பெயர் எலிமெலேக். அவன் மனைவியின் பெயர் நோயேமி. அவர்களுடைய இரு புதல்வர்களில் ஒருவன் பெயர் மகலோன், மற்றொருவன் பெயர் கேளியோன். அவர்கள் யூதா நாட்டுப் பெத்லகேம் என்னும் எப்ராத்தா ஊரிலிருந்து மோவாப் நாட்டிற்குப் போய் அங்கே குடியிருந்தனர்.

  3 நோயேமியுடைய கணவன் எலிமெலேக் இறந்தான். அவளோ தன் புதல்வர்களோடு வாழ்ந்து வந்தாள்.

  4 அவர்கள் ஒர்பா, ரூத் என்ற இரு மோவாபிய பெண்களை மணந்து பத்து ஆண்டுகள் அங்கே வாழ்ந்தனர்.

  5 பின்னர் மகலேன், கேளியோன் இருவரும் இறக்க, அவள் கணவனையும் இரு மக்களையும் இழந்தவளாய் விடப்பட்டாள்.

  6 ஆண்டவர் தம் மக்களைக் கடைக்கண் நோக்கி உயிர் வாழ அவர்களுக்கு உணவு அளித்தார் என்று கேள்விப்பட்டு, அவள் மோவாப் நாட்டிலிருந்து தன் இரு மருமக்களோடு புறப்பட்டுத் தன் சொந்த ஊர் போக விழைந்தாள்.

  7 ஆகையால் தன் இரு மருமக்களோடும் தான் பிழைக்க வந்த இடத்தை விட்டு வெளியேறி, யூதா நாட்டிற்குத் திரும்பினாள்.

  8 அப்போது அவள் தன் மருமக்களை நோக்கி, "நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்குப் போங்கள். இறந்து போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் இரக்கம் காட்டி வந்தது போல் ஆண்டவரும் உங்களுக்கு இரக்கம் காட்டுவாராக.

  9 நீங்கள் மணக்கவிருக்கும் கணவர்களுடைய வீட்டில் ஆண்டவர் உங்கள் இருவருக்கும் அமைதி அளிப்பாராக" என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள். அவர்களோ உரத்த குரலில் அழ ஆரம்பித்தனர்.

  10 உம்முடைய இனத்தாரிடம் நாங்களும் உம்மோடு வருவோம்" என்று சொன்னார்கள்.

  11 அதற்கு நோயேமி, "என் மக்களே, நீங்கள் திரும்பிப் போங்கள். என்னோடு ஏன் வருகிறீர்கள்? இனியும் எனக்குப் பிள்ளைப் பேறு உண்டாகும் என்றும், நான் உங்களுக்குக் கணவர்களைக் கொடுப்பேன் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா?

  12 திரும்பிப் போங்கள், என் மக்களே, போய்விடுங்கள். நானோ வயது சென்றவள். இனித் திருமணம் முடிக்கவும் என்னால் முடியாது. நான் இன்று கருவுற்றுப் பிள்ளைகளைப் பெறக்கூடுமாயினும்,

  13 அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டுமே! அதற்குள் நீங்களும் கிழவிகளாகி விடுவீர்களே! வேண்டாம், என் மக்களே, உங்களை கெஞ்சுகிறேன்@ என்னோடு வராதீர்கள். உங்களைப்பற்றி நான் துயரப்படுகிறேன். கடவுளின் கை எனக்கு எதிராயிருக்கிறது" என்று சொன்னாள்.

  14 அப்பொழுது அவர்கள் மறுமுறையும் ஓலமிட்டு அழத் தொடங்கினர். ஒர்பா மாமியை முத்தமிட்டுத் தன் வீடு திரும்பினாள். ஆனால் ரூத் தன் மாமியை விட்டுப் பிரியவில்லை.

  15 நோயேமி அவளைப் பார்த்து, "இதோ! உன் உறவினள் தன் இனத்தாரிடமும் தேவர்களிடமும் திரும்பிப் போய் விட்டாளே@ நீயும் அவளோடு போ" என்றாள்.

  16 அதற்கு ரூத், "நான் உம்மை விட்டுப் போகும் படி இன்னும் என்னைத் தூண்ட வேண்டாம். நீர் எங்குப் போனாலும் நானும் வருவேன். நீர் எங்குத் தங்குவீரோ அங்கே நானும் தங்குவேன். உங்கள் இனமே என் இனம்@ உங்கள் கடவுளே எனக்கும் கடவுள்.

  17 நீர் எந்தப் பூமியில் இறந்து புதைக்கப்படுவீரோ அதே பூமியில் இறந்து புதைக்கப்படுவேன். சாவு ஒன்றே உம்மையும் என்னையும் பிரிக்கும். இல்லாவிடில் ஆண்டவர் எனக்குத் தக்க தண்டனை அளிப்பாராக" என்றாள்.

  18 தன்னோடு வர ரூத் ஒரே மனதாய் தீர்மானித்திருக்கக் கண்ட நோயேமி, அதன்பின் அவளைத் தடை பண்ணவுமில்லை, திரும்பிப் போகும்படி சொல்லவுமில்லை.

  19 இப்படியே இருவரும் நடந்து போய்ப் பெத்லகேமை அடைந்தனர். அவர்கள் நகருக்கு வந்த செய்தி விரைவில் எங்கும் பரவிற்று. "இவள் அந்த நோயேமிதானோ?" என்று பெண்கள் பேசிக் கொண்டனர்.

  20 அவளோ, "நீங்கள் என்னை நோயேமி, அதாவது அழகி என்று அழைக்காது, மாரா, அதாவது கசப்பி என்று கூப்பிடுங்கள்@ ஏனெனில் எல்லாம் வல்லவர் மிகுந்த கசப்புத் தன்மையால் என்னை நிறைந்திருக்கிறார்.

  21 நிறைவுற்றவளாய்ப் போனேன்@ ஆண்டவர் என்னை வெறுமையாகத் திரும்பி வரச் செய்தார். ஆண்டவர் சிறுமைப் படுத்திய, எல்லாம் வல்லவர் துன்பப்படுத்திய என்னை நோயேமி என்று ஏன் அழைக்கிறீர்கள்?" என்றாள்.

  22 இப்படி நோயேமி தன் மோவாபிய மருமகளோடு தான் பிழைக்கப் போயிருந்த நாட்டை விட்டுப் புறப்பட்டுப் பெத்லகேமுக்குத் திரும்பி வந்தாள். அது வாற்கோதுமை அறுவடைக் காலம்.

  Previous Next

  نموذج الاتصال