No results found

  பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

  ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பிறந்த வரலாறு:-  

  இளம் வயதில் துறவு பூண்ட ஆதிசங்கரர். தமது துறவு நெறிக்கேற்ப நாள்தோறும் இறைவழிபாடு முடிந்து பிச்சை ஏற்கப் புறப்படுவார். மற்றவர் இட்டதை உண்டு தம் இறைப்பணியைத் தொடருவார்.அம்முறைப்படி ஒரு நாள் ஸ்ரீசங்கரர் சோமதேவர் என்பவருடைய இல்லத்திற்குச் சென்று "பவதி பிஷாந்தேஹி" என மும்முறை உச்சரித்தார். சோமதேவர் அப்போது இல்லத்தில் இல்லை. அவருடைய துணைவியார் தருவசீலை ஆங்கிருந்தார். பிச்சைக்கு வியப்பு மூண்டது. பாலசங்கரரைப் பார்த்த வுடனே, பரவேஸ்வரனே பிச்சைக்கு வந்துவிட்டாரே என்று அதிசயித்தார். ஆனால் அவரிடத்தில் பிச்சை இடுவதற்கான பொருள் ஏதும் இல்லை.

  கல்வியில் தேர்ச்சி பெற்றிருந்த சோம தேவர் வறுமையிலும் தேர்ச்சி அடைந்திருந்தார். அவரும் சங்கரரைப் போலவே பிச்சை கேட்கச் சென்றிருந்தார். வீட்டில் ஒன்றும் இல்லை. எனவே, மிகுந்த வருத்தத்துடன் அம்மையார் சங்கரரைப் பார்த்து, "நான் கொடிய பாவம் செய்தவள். பகவானே பிச்சைக்கு வந்திருக்கும் போது, கொடுப்பதற்கு ஒன்று மில்லையே என ஏங்குகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்" என இறைஞ்சினார். ஆனால் சங்கரரோ, "அன்னையே! அடியேனுக்குக் கொடுக்க ஏதும் இல்லை எனக் கலங்க வேண்டாம். அன்னமிடவழி இல்லை என்றால் பரவாயில்லை. அன்னத்திற்குத் துணையாக இருக்கும் உண்ணக்கூடிய பொருள் எதுவானாலும், எவ்வளவு சிறிதளவேனும் அன்போடு தாருங்கள்" என வேண்டினார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்த தர்வசீலை அம்மையாருக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒரு பழைய பாத்திரத்தில் நெடுநாட்களுக்கு முன்பு செய்த நெல்லிக்காய் ஊருகாய் ஒன்று மீதமிருந்தது. அந்த நெல்லிக்காயை மிகுந்த மனத்தயக்கமுடன் மகான் சங்கரரின் பிச்சைப் பாத்திரத்தில் அம்மையார் இட்டார்.

  இதனால் மனம் மகிழ்ந்த ஆதிசங்கரர், " அன்னையே! அன்புடன் தாங்கள் எனக்களித்த இந்த நெல்லிக்காயைவிடச் சிறந்த பொருள் இவ்வுலகில் எதுவும் கிடையாது. இது என் தாயாருக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதிதிக்கு அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருந்த வறுமை இன்றோடு அழிந்துவிட்டது. இனிமேல் உங்கள் கணவர் பிச்சைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை" எனக்கூறிவிட்டு, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமஹாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து இந்த "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஸ்ரீலட்சுமி தேவியாரை வழிப்பட்டார்.

  உடனே தேவி, சங்கரர் முன் எழுந்தருளி, வறுமையில் வாடிய குசேலரும் சுசிலையும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளால் குபேரசம்பந்தைப் பெற்றனர். வறுமையில் வாடியவர்கள் பெற்ற செல்வத்தால் நியமங்களை, ஆசார அநுஷ்டானங்களை மறந்து சுக பசி அமர்த்தாமல் தவிக்கவிட்டனர். எனவே, அப்பாவ வினையின் பயனாக, இந்த யுகத்தில் அவர்கள் இங்கே வறுமைப்பிடியில் சிக்கித்தவிக் கின்றனர் என்ற உண்மையை ஸ்ரீ சங்கரரிடம் ஸ்ரீமஹாலட்சுமி தேவி புலப்படுத்தினார். இருப்பினும் வறுமையிலும் திட மனதுடன் ஆதிசங்கரருக்கு நெல்லிக்காயைப் பிச்சையாக இட்ட காரணத்தினால், ஸ்ரீலட்சுமி தேவி மனமுருகி அந்த இல்லத்தின் மீது தங்கமயமான நெல்லிக்காய்களை மழைபோலப் பொழிந்தார். அது மட்டுமில்லாமல், இந்தக் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடுவோர் அனைவருக்கும் தன் நல்லருள் கிடைக்கும் என உருதி மொழிந்தார்.

  எனவே, நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டினால். நம் வாழ்வு வறுமையில்லாமல் வளமான வசதிகளுடனும். எல்லாவித ஐஸ்வர்யங்களுடனும் சுபிட்சமாக இருக்கும் என்பது உறுதி.

  பொன்மொழி பொழியச் செய்த அந்த கனகதாரா ஸ்தோத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கவுரையுடன் பின்வருமாறு காண்போம்.

  ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்:-

  அங்கம் ஹரே:புனகபூஷன
        மாச்ரயந்தீ
  ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
        தமாலம்
  அங்கீக்ரு தாகில விபூதி
        ரபாங்கலீலா
  மாங்கல்ய தாஸ்து மம
        மங்கல தேவதாயா:
  1


  மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

  முக்தா முஹீர்விதததீ
        வதனே முராரே:
  ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
        கதாகதானி
  மாலா த்ருசோர் மது கரீவ
        மஹோத்பலே யா
  ஸாமே ச்ரியம் திசது
        ஸாகர ஸம்பவாயா:
  2


  ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

  ஆமீலிதாட்ச மதிகம்ய
        முதா முகுந்தம்
  ஆனந்த கந்த மநிமேஷ
        மனங்கதந்த்ரம்
  ஆகேகர ஸ்தித கனீனிக
        பக்ஷ்ம நேத்ரம்
  பூத்யை பவேன்மம
        பூஜங்க சயாங்கனாயா
  3


  ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

  பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
        கெளஸ்துபே யா
  ஹாராவலீவஹரி நீலமயி
        விபாதி
  காமப்ரதா பகவதோபி
        கடாட்ச மாலா
  கல்யாண மாவஹதுமே
        கமலாலயாயா:
  4


  மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

  காலாம்புதாலி லலிதோரஸி
        கைடபாரே:
  தாராதரே ஸ்புரதியா
        தடிதங்கனேவ
  மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
        மஹனீய மூர்த்தி
  பத்ராணி மேதிசது
        பார்கவநந்தனாயா:
  5


  மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில் இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

  ப்ராப்தம் பதம் ப்ரதமத:
        கலு யத்ப்ரபாவாத்
  மாங்கல்ய பாஜி மதுமாதினி
        மன் மதேன
  மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
        மந்தாலஸம் சமகராலய கன்யகாயா:
  6


  ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

  விச்வாம ரேந்த்ர பதவீ
        ப்ரமதான தட்சம்
  ஆனந்த ஹேதுரதிகம்
        முரவித்விஷோ அபி
  ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
        மீக்ஷணார்த்தம்
  இந்தீவரோதர ஸஹோதர
        மிந்திராயா
  7


  அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

  இஷ்டா விசிஷ்ட மதயோபி
        யயா தயார்த்ர
  திருஷ்ட்யாத்ரி விஷ்டப
        பதம் ஸ லபம் லபந்தே
  திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
        திப்திரிஷ்டாம்
  புஷ்டிம் க்ருஷீஷ்ட
        மம புஷ்கர விஷ்டராயா
  8


  எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

  தத்யாத் தயானுபவனோ
        த்ரவிணாம் புதாராம்
  அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
        சிசெள விஷன்ணே
  துஷ்கர்ம தர்மமபனீய
        சிராயதூரம்
  நாராயண ப்ரணயனீ
        நயனாம் புவாஹ:
  9


  எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

  கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
        சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
  ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
        மேலிஷீ ஸம்ஸ்திதாயை
  தஸ்யை நமஸ்த்ரி புவனைக
        குரோஸ்தருண்யை!
  10


  திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

  ஸ்ருத்யை நமோஸ்து
        சுபகர்ம பலப்ரஸீத்யை
  ரத்யை நமோஸ்துரமணீய
        குணார்ணவாயை
  சக்த்யை நமோஸ்து
        சதபத்ர நிகேதெனாயை
  புஷ்ட்யை நமோஸ்து
        புருஷோத்தம வல்லபாயை
  11


  நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

  நமோஸ்து நாலீக நிபானனாயை
        நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
  நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
        நமோஸ்து நாராயண வல்லபாயை:
  12


  பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.

  நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
        நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
  நமோஸ்து தேவாதி தயாபராயை
        நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை:
  13


  முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

  நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
        நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
  நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
        நமோஸ்து தாமோதர வல்லபாயை
  14


  சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

  நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
        நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
  நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
        நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை:
  15


  சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

  ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
        நந்தனானி
  ஸாம்ராஜ்யதான
        விபவானி ஸரோருஹாணி
  த்வத் வந்தனானி துரிதா
        ஹரணோத்யதானி
  மாமேவ மாதரனிசம்
        கலயந்து மான்யே
  16


  எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

  யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
        ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
  ஸந்தனோதி வசனாங்க மானஸை
        த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே:
  17


  தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

  ஸரஸிஜ நிலயே ஸரோஜ
        ஹஸ்தே
  தவல தராம்சுக
        கந்த மால்ய சோபே
  பகவதி ஹரிவல்லபே
        மனோஜ்ஞே
  த்ரிபுவன பூதிகரி
        ப்ரஸீத மஹ்யம்
  18


  சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

  திக்தஸ்திபி கனக கும்ப
        முகாவஸ்ருஷ்ட
  ஸ்வர்வாகினி விமலசாரு
        ஜலாம்னு தாங்கீம
  ப்ராதர் நமாமி ஜகதாம்
        ஜனனீம் அக்ஷே
  லோகாதி நாதக்ரு ஹிணீம்
        அம்ருதாப்தி புத்ரீம்
  19


  பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

  கமலே கமலாட்ச வல்லபேத்வம்
        கருணாபூர தரங்கிதைரபாங்கை
  அவலோகய மாமநிஞ் சனானாம்
        ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா
  20


  எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

  ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
        த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
  குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
        பவந்தி தே புவி புத பாவிதாசயா
  21


  மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய 'கனகதாரா ஸ்தோத்திரத்தினால்', நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

   

  Previous Next

  نموذج الاتصال