No results found

  தியானம்

  தியானம் என்பது தினமும் காலை ஏதோ ஒரு மணி நேரம் செய்வதோ அல்லது முஸ்ஸிம்கள் செய்வது போன்று ஒரு நாளில் ஐந்து முறை செய்வதோ அல்ல.
  வெவ்வேறு மதங்கள் வெவ்வேறு நேரங்களை தியானத்திற்கு என்று வைத்துக் கொண்டுள்ளன.
  ஆனால் தியானத்திற்கு என்று தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது மற்ற நேரங்களில்
  தியானத்தில் இல்லாமல் இருப்பது என்பதாகும்.

  ஒருமணி நேரம் தியானம், மற்ற இருபத்திமூன்று மணி நேரம் தியானத்தில் இல்லாமல் இருப்பது என்றால் இறுதியில் தியானம் வெல்லும் என்றா நீ
  நினைக்கிறாய் – இந்த ஒரு மணி நேரத்தில் நீ செய்வது என்னவாக இருந்தாலும் இந்த இருபத்தி மூன்று மணி நேரம் அதை துடைத்து எறிந்துவிடும்.

  இரண்டாவதாக இருபத்தி மூன்று மணி நேரம் தியானமற்ற நிலையில் உள்ள ஒரு மனிதன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் தியானம் செய்வது எப்படி
  சாத்தியம் – அது இயலாதது. அது இருபத்தி மூன்று மணி நேரம் ஆரோக்கியமற்று இருக்கும்
  ஒருவன் அவன் நினைத்தவுடன் திடீரென ஒரு மணி நேரம் மட்டும் ஆரோக்கியமாக மாறுவதை போன்றது. ஆரோக்கியமாக இருப்பதும் ஆரோக்கியமற்று போவதும் ஏதோ அவன் கைகளில் இருப்பதை
  போல அவன் நினைத்தவுடன் ஆரோக்கியமாகவும், நோய்வாய் படும் நேரம் இது என நினைத்தவுடன் நோய்வாய் படுவதைப் போலவும் இருக்கிறது இது.

  தியானம் உனது உள் ஆரோக்கியம். ஒரு நாளின் இருபத்தி மூன்று மணி நேரம் ஆன்மீக ரீதியாக ஆரோக்கியமற்று, கோபம், வெறுப்பு, பொறாமை, போட்டி, வன்முறை என நிரம்பி வழிந்து கொண்டு திடீரென ஒரு மணி நேரம் மட்டும்
  புத்தரைப் போல மாறுவது எங்ஙனம் சாத்தியம் – இது சாத்தியமற்றது.

  எல்லா மதங்களும் மனிதனை திசை திருப்புகின்றன, ஏமாற்றுகின்றன.. ஏனெனில் மக்கள் ஆன்மீகரீதியான ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ள
  விரும்புகின்றனர். அவர்களுக்கு ஒரு பொம்மை – ஒரு மணி நேரம் இந்த தியானம் செய்வதை வைத்துக் கொள் – கொடுக்கப்படுகிறது. ஆனால் இதன் தன்மையை மக்கள் பார்ப்பதில்லை. இது இயற்கையானது அல்ல. நீ இதை இந்த வழியில் செய்ய முடியாது.

  நீ ஒன்று நாள் முழுவதும் தியானம் செய் அல்லது நாள் முழுவதும் தியானம் செய்யாமல் இரு. அது உன் முடிவுதான். ஆனால் நீ உன் வாழ்வை
  இரண்டு விதமாக பிரிக்கமுடியாது. – கோவிலில் தியானிப்பது, கடையில் ஆபீஸில் தியானிக்காமல் இருப்பது என இருக்கமுடியாது.

  கௌதமபுத்தர் மற்றும் அவர் வழி வந்த அவரைப் போன்ற
  மக்கள் கடந்த காலங்களில் நீ என்ன செய்தாலும் உன் ஒவ்வொரு செயலிலும் ஊடுருவும் ஒரு தியானத்தை வலியுறுத்தி வந்தனர். அது உன்னை நிழல் போல தொடரும். அது உன் உள்ளுணர்வில் தன்னுணர்வில் ஒரு ஆழ்நீரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கும். நீ கடைவீதியிலோ, கோவிலிலோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் உனது உள்ளார்ந்த
  மௌனம் பாதிக்கப்படாமல், சிதையாமல் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தியானத்தின் குணம்.

  அதனால் முதலில் முயற்சி எதுவும் செய்யாமல் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். கோபம் இருந்தால் கவனி. அதை வெளியே தள்ள எந்த
  முயற்சியும் செய்யாதே, ஒரு பார்வையாளனாக இரு. அது உன் வேலை அல்ல என்பது போல இரு. வெறுப்பு இருக்குமானால் கவனி. இவை யாவும் மிக மெலிதான மேகங்கள் போன்றவை. நீ கவனிப்பவனாகவே இருந்தால் சில விநாடிகளுக்குள் அவை மறைந்து விடும். அவை தானாகவே
  போய் விடும்.

  அவற்றை தள்ளாதே, ஏனெனில் எந்த அளவு அவற்றை வெளியே தள்ள முயற்சிக்கிறாயோ அந்த அளவு நீ அவற்றை உண்மையென கொள்கிறாய். நீ அவற்றை வெளியே தள்ள தள்ள நீ அவற்றின் தளத்திற்கு இறங்கி விடுகிறாய். நீ அவற்றை வெளியே தள்ளும் அளவு அவை அழுத்தமான பழக்கங்களாக மாறும்.

  நீ பூச்சிகளை கவனித்திருக்கிறாயா – நீ ஒரு பூச்சியை வெளியே தள்ளினால், உடனே அது திரும்பி உன்னை நோக்கியே ஓடி வரும். அது ஒரு
  மிக வித்தியாதமான செயல். இந்த முழு உலகமும் அதற்கு இருக்க அது வேறு எங்கும் போகாது. அது சவால் விடுகிறது. யார் நீ – ஒரு சிறு பூச்சி, கரப்பான் பூச்சி – அதை தள்ளி விட்டு விட்டு என்ன நடக்கிறது என்று பார். அது உடனே மிகுந்த வேகத்துடன் திரும்பி வரும்.

  உன்னுடைய மனதும் இதையேதான் செய்யும். உண்மையில் கரப்பான்பூச்சியின் மனமும் உன்னுடைய மனமும் வேறு வேறல்ல. அவற்றின் அடிப்படை
  கட்டமைப்பு ஒன்றுதான். அவற்றின் மனம் ஒரு சிறிய மாடல் போன்றது, சிறிய அளவிலானது.
  உன்னுடையது கொஞ்சம் பெரியது. ஆனால் உன்னிடமுள்ள அதே திறமைகள் அவற்றிடமும் உள்ளது.

  உன்னுடைய மனதிலுள்ள விஷயத்தை எடுத்து வெளியே வீச முயற்சி செய்யும் போது, அது திரும்பவும் உன்னிடமே வேகமாக ஓடி வரும். நீ முயற்சி
  செய்து பார். குரங்கைப் பற்றி எதுவும் நினைக்கக் கூடாது என்று முடிவு செய்து
  கொண்டு ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்து என்ன நடக்கிறதென்று பார். உலகிலுள்ள அத்தனை குரங்குகளுக்கும் உன் மேல் ஆர்வம் வரும். நான் குரங்குகளைப் பற்றி நினைக்கப் போவதில்லை என்று நீ அவற்றிடம் சொல்ல வேண்டியதில்லை. உன் அறையில் அந்த எண்ணத்துடன் உட்கார்ந்தாலே போதும். அது எல்லா குரங்குகளுக்கும் பரப்பப் பட்டு விடும். நீ எங்கே என்ன செய்து கொண்டிருந்தாலும் அவை அங்கே இருக்கும். ஐந்து நிமிடங்கள் முடிந்து
  விட்டது. 

  இனி நீ இங்கே இருக்க விரும்பினாலும் சரி, போக விரும்பினாலும் சரி, அது
  உன்னை பொறுத்தது என்று நீ கூறும் அந்த கணமே அவை யாவும் போய்விடும். ஆனால் நீ போ என்று சொல்லி அவை போவது அவற்றின் பெருமைக்கு இழுக்கு. ஒவ்வொரு எண்ணமும் ஒவ்வொரு உணர்ச்சியும் ஒவ்வொரு உணர்வும் அதற்கான தான் என்ற ஆணவத்தைக் கொண்டுள்ளது போலத்
  தோன்றுகிறது. அதனால் அதை எதிர்த்து போரிடும் மக்கள் யாரும் வெற்றி பெறுவதில்லை.

  சண்டையிடாதே, வெறுமனே கவனி. அவை அங்கிருப்பதால் எந்த தீங்கும் இல்லை. நீ உன்னை கோபத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாத
  வரை தனிபட்ட கோபம் மட்டும் எந்த தீமையையும் செய்து விட முடியாது. நீ அதனுடன் அடையாளப்படுத்திக் கொண்டு விட்டால் பின் நீ மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எதையாவது செய்யக் கூடும். கோபம் மட்டும் எதையும் செய்துவிட முடியாது. அது சக்தியற்றது, அது வெறுமனே ஒரு எண்ணம்தான். அது அங்கேயே இருக்கட்டும், கவனி, மகிழ்வுடன் கவனி. உன்னுடைய பங்களிப்பு இல்லாமல் அதனால் எத்தனை நேரம் இருக்க
  முடிகிறது என்று பார். ஒரு சில வினாடிகளுக்கு மேல் அதனால் தாக்கு பிடிக்க
  முடியாது. அது போய் விடும்.

  தியானம் ஒரு கவனமாக மலர வேண்டும், பின் ஒரு நாளின் 24 மணி நேரமும் கவனிப்பது சாத்தியமாகும். தூங்கப் போகும் போது கூட கவனி.
  தூக்கம் உன்னை ஆட் கொள்ளும் கடைசி விநாடி வரை கவனமாகப் பார். இருள் அடர்ந்து கொண்டே போகும், உடல் தளர்வடையும், நீ விழிப்பிலிருந்து தூக்கத்தினுள் விழும் ஒரு கட்டம் வரும் – அந்த கணம் வரை பார். பின் காலையில் முதல் விஷயமாக, தூக்கத்திலிருந்து எழுந்து விட்டோம் என நீ உணர்ந்த கணமே கவனிக்க ஆரம்பித்து விடு. பின் விரைவிலேயே தூக்கத்தில் நீ இருக்கும் போது கூட கவனிக்க ஆரம்பித்து விடுவாய்.

  கவனித்துப் பாரத்துக் கொண்டிருப்பது என்பது இரவும் பகலும் உன்னுள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீபமாகட்டும்.

  இதுதான் உண்மையான ஆணித்தரமான தியானமாகும். மற்ற எல்லாமே தியானம் என்ற பெயரில், நீ ஏதோ ஆன்மீக சம்பந்தமானது செய்து
  கொண்டிருக்கிறாய் என உன்னை ஏமாற்றும், நீ விளையாட கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைதான். இந்த உண்மையான தியானத்தில் நீ தவிர்க்க இயலாததையும் தாண்டி வந்து விடுவாய். பொய்யான யாவும் காணாமல் போய்விடும்.

  ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள யாவும் பொய்யானது அல்ல. எது பொய்யானது இல்லையோ அது தவிர்க்க இயலாதது. தவிர்க்க இயலாததை நீ என்ன
  செய்யப் போகிறாய். நீ அதைப் பற்றி நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய். அந்த தவிர்க்க இயலாதது தான் தியானம்.

  தவிர்க்க முடியாததை பார்த்துக் கொண்டே இருந்தாயானால் பொய்யானது தானாகவே கரைந்து போய் விடுவதை தெளிவாக காண்பாய். உனது பொய்யான கனவுகளின், ஆசை மேகத்தின் பின்னால் மறைந்து இருந்த உண்மையான விஷயம் இப்போது தெளிவாக, மேலும் அதிக தெளிவுடன் உன் முன் நிற்பதை காண்பாய்.

  Previous Next

  نموذج الاتصال