No results found

  இராயப்பர் எழுதிய முதலாவது நிருபம்

  அதிகாரம் 1

  1 போந்த்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா நாடுகளில் சிதறுண்டு, வெளி நாட்டவரென வாழ்பவர்களாய், ஆவியானவரால் பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தால் தெளிக்கப்படவும், தந்தையாகிய கடவுளின் முன்னறிவுக்கேற்பத் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு,

  2 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான இராயப்பன் எழுதுவது: உங்களுக்கு அருளும் சமாதானமும் பெருகுக!

  3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.

  4 இதனால் நமக்குக் கிடைக்கும் உரிமைப் பேறு அழியாதது. மாசுற முடியாதது, வாடாதது.

  5 இறுதிக் காலத்தில் வெளிப்படப் போகும் மீட்பு வரும் வரை, விசுவாசத்தின் வழியாய்க் கடவுளின் வல்லமையால் காக்கப் பட்டிருக்கும் உங்களுக்கனெ, அந்த உரிமைப் பேறு வானுலகில் வைக்கப்பட்டுள்ளது.

  6 இப்போது சொற்பக் காலம் நீங்கள் பலவகைச் சோதனைகளால் துன்புற்றாலும், அப்பேற்றை நினைத்து களிகூருகிறீர்கள்.

  7 இச்சோதனைகள் நிகழ்வது உங்கள் விசுவாசம் உண்மையானதென்று காட்டவே. அழியக்கூடிய பொன்னும் நெருப்பில் புடமிடப்படுகிறது. அதை விட விலையுயர்ந்த உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட வேண்டும். அப்போது தான் இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் அவ்விசுவாசம் உங்களுக்குப் புகழும் மகிமையும் மாண்பும் தருவதாய் விளங்கும்.

  8 நீங்கள் அவரைப் பார்ப்பதில்லை@ எனினும், அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்போதும் நீங்கள் அவரைப் பார்க்கிறதில்லை@ எனினும், அவர்மீது விசுவாசம் கொண்டு, சொல்லொண்ணா மகிழ்ச்சியும், மகிமை நிறை அக்களிப்பும் உற்று,

  9 உங்கள் விசுவாசத்தின் இறுதிப் பயனாக ஆன்ம மீட்பை அடைகிறீர்கள்.

  10 இந்த மீட்பைக் குறித்துத் தான் இறைவாக்கினர் துருவித் துருவி ஆராய்ந்தனர்@ உங்களுக்கு என்றிருந்த அருளைப் பற்றி இறைவாக்குரைத்தனர்.

  11 தங்களுக்குள்ளிருந்த கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து படவேண்டிய பாடுகளையும், அவற்றிற்குப் பின் வரவேண்டிய மகிமையையும் முன்னறிவித்த போது, அவர் குறிப்பிட்ட காலமும் சூழ்நிலையும் எவையென்று ஆராய்ந்தனர்.

  12 இவற்றை முன்னறிவிக்கும் பணி தங்கள் பொருட்டன்று, உங்கள் பொருட்டே என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர்கள் முன்னுரைத்தவையெல்லாம் விண்ணினின்று அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியால் நற்செய்தி அறிவிப்பவர்கள் வாயிலாய், இப்போது உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காண வானதூதர்களும் வேட்கைகொள்ளுகின்றனர்.

  13 ஆகவே, உங்கள் மனம் செயலாற்ற ஆயத்தமாயிருக்கட்டும். மட்டுமிதத்தோடு இருங்கள்@ இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில் உங்களுக்கு அளிக்கப்பெறும் அருளின் மீது முழு நம்பிக்கை வையுங்கள்.

  14 கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள் என நடங்கள். முன்பு நீங்கள் அறியாமையில் உழன்ற போது உங்கள் நடத்தை இச்சைகளுக்கு ஏற்றதாய் இருந்தது.

  15 அப்படி நடவாமல், உங்களை அழைத்த இறைவன் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையில் முற்றும் பரிசுத்தராய் இருங்கள்.

  16 ஏனெனில், ~ யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ~ என எழுதப் பட்டிருக்கிறது.

  17 நீங்கள் தந்தை என அழைக்கும் இறைவன், ஆளைப்பார்த்து தீர்ப்புக் கூறாதவர். ஆதலால், அவனவன் செயல்கள் படித் தீர்ப்புக் கூறுபவர். ஆதலால், நீங்கள் இவ்வுலகில் அந்நியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

  18 உங்கள் முன்னோரிடமிருந்து வழி வழியாய் வந்த பயனற்ற நடத்தையினின்று உங்களை விடுதலை ஆக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது அழிவுறும் பொன்னும் வெள்ளியுமன்று.

  19 மாசு மறுவற்ற செம்மறி போன்ற கிறிஸ்துவின் விலைமதிப்பில்லாத இரத்தமே.

  20 உலகம் தோன்றுமுன்னே முன்னறியப் பெற்ற இவர் உங்களுக்காக இந்த இறுதிக் காலத்தில் வெளிப்பட்டார்.

  21 இறந்தோரினின்று அவரை உயிர்ப்பித்து மகிமைப்படுத்திய கடவுள் மீது நீங்கள் விசுவாசம் கொள்வது அவரால் தான். இதனால் உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் கடவுள் மீது ஊன்றியிருக்கின்றன.

  22 உண்மைக்குக் கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மாக்களைப் புனிதப்படுத்திய நீங்கள் சகோதரர்களிடம் கள்ளமற்ற அன்பு காட்ட முடியும். ஆகவே. ஒருவருக்கொருவர் ஆர்வமுடன் உளமார அன்பு செய்யுங்கள்.

  23 நீங்கள் புதிதாய்ப் பிறந்துள்ளீர்கள். அப்பிறப்பு உங்களுக்கு அழிவுள்ள வித்தினாலன்று, அழிவில்லா வித்தினால் கிடைத்தது. உயிருள்ளதும், என்றும் நிலைத்து நிற்பதுமான கடவுளின் வார்த்தையால் பிறந்துள்ளீர்கள்.

  24 ஏனெனில், " மனிதன் எவனும் புல்லைப்போன்றவன்: அவன் மகிமை அனைத்தும் புல்வெளிப் பூவைப்போன்றது. புல் உலர்ந்துபோம்@ பூ உதிர்ந்துபோம்.

  25 ஆனால், ஆண்டவரின் சொல் என்றென்றும் நிலைக்கும். "இச்சொல்லே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி.

  Previous Next

  نموذج الاتصال